திருக்குறள்

அதிகாரம் - 49 முகப்பு / Home

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

(481) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.

கலைஞர் மு. கருணாநிதி - பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும் எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.

(482) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.

கலைஞர் மு. கருணாநிதி - காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அற஧ந்து செயின்.

(483) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - (செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?

கலைஞர் மு. கருணாநிதி - தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

(484) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - (செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.

கலைஞர் மு. கருணாநிதி - உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

(485) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.

கலைஞர் மு. கருணாநிதி - கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

(486) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.

கலைஞர் மு. கருணாநிதி - கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

(487) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - தம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்திற்குள் வைத்திருப்பர்.

கலைஞர் மு. கருணாநிதி - பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

(488) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.

கலைஞர் மு. கருணாநிதி - பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

(489) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.

கலைஞர் மு. கருணாநிதி - கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

(490) குறள் விளக்கம் :
பேராசிரியர் மு.வரதராசனார் - பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா - ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.

கலைஞர் மு. கருணாநிதி - காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும் காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்

Previous | Next